அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

By Manikanda PrabuFirst Published Feb 4, 2024, 11:37 AM IST
Highlights

அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருத்தொண்டர் சபை அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் 1984ஆம் ஆண்டில் பூம்புகார் கப்பல் கழகத்துக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. தற்போது வரை ரூ.3 கோடி வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வாடகை பாக்கியை வசூலிக்குமாறு 2022ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை வாடகை பாக்கி வசூலிக்கப்படவில்லை.” என கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் திருத்தொண்டர் சபை அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கோரியிருந்தார்.

Latest Videos

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பூம்புகார் கப்பல் கழகம் ரூ.80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. அவகாசம் வழங்கினால், வாடகை பாக்கி வசூலிக்கப்படும்.” என அறநிலையத் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, “அறநிலையத் துறை கட்டிடத்துக்கு சாதாரண ஏழை வியாபாரிகள் வாடகை வழங்க மறுத்தால், அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பூம்புகார் கப்பல் கழகம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ரூ.3 கோடி வாடகை பாக்கி வைக்கும் வரை அறநிலையத் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா?” என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

காமராஜர் பெயரில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்கள் வேலைகளை செய்கிறார்களா? இல்லையா? என காட்டமாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அரசு நல்ல ஊதியம் தானே வழங்குகிறது. குறைவாக சம்பளம் வழங்கவில்லையே? அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.

இந்த மனு தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

click me!