ஸ்டாலினை திடீரென நேரில் சந்தித்த தமிழக பாஜக எம்எல்ஏ.! காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Aug 20, 2024, 2:47 PM IST

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்து தொகுதி கோரிக்கைகளை வழங்கினார். கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணிக்கு முதலமைச்சர் உறுதியளித்ததாகவும், திமுக- பாஜக கூட்டணி குறித்து பேச விரும்பவில்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


முதலமைச்சர் ஸ்டாலினோடு சந்திப்பு

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக இரு தரப்பும் நட்பு பாராட்டி வருகிறது. இதன் காரணமாக திமுக தனது கூட்டணியில் காங்கிரசுக்கு பதிலாக பாஜகவை இணைக்கப்போகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த தகவலை முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்த நிலையில் தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.  பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி சம்பந்தமான கோரிக்கை மனுக்களை வழங்கினார். 

Tap to resize

Latest Videos

கோவை மக்கள் கோரிக்கை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்திற்கான மாஸ்டர் பிளான், ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சரிடம் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான மத்திய அரசின் பணிகளுக்கு மாநில அரசால் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில், நில எடுப்புக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் நீக்குவதற்கு முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார். 

திமுக- பாஜக கூட்டணி

இதனையடுத்து தமிழகத்தில்  திமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக- பாஜக உறவு பற்றிய கதைகளுக்குள் செல்ல விரும்பவில்லை எனக் கூறிய வானதி சீனிவாசன், எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் எங்களின் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  மத்திய அரசின் பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, நாட்டின் பிரதமர் உட்பட அமைச்சர்களில் 99 சதவிகிதம் பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் எனவும், நாட்டையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் இது போன்ற கேள்விகள் ஏற்புடையதல்ல எனவும் வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா.? மத்திய அரசுக்கு இனி அவகாசம் இல்லை- உச்சநீதின்றம் அதிரடி
 

click me!