காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா, கேரள அரசுகளை ஆதரிக்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறது. திமுக அரசின் மெகா நாடகத்தை கண்டித்து வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினர் போராட்டம்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கர்நாடகா மற்றும் கேரள மாநில தலைவர்களை தமிழ்நாட்டுக்கு வரவேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து தமிழக பாஜகவினர் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்துகின்றனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும் எதிர்ப்பையும் மடைமாற்றுவதற்காக திமுக அரசு ஒரு மெகா நாடகம் நடத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்கள் மத்தியில் கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் எனவும் சாடியுள்ளார்.
தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து, மார்ச் 22ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பாஜகவினர் தங்கள் வீட்டின் முன்பு நின்று கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அவரவர் வீட்டின் முன்பாக நின்று கருப்புக்கொடியுடன் திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருப்புச் சட்டையுடன் கலந்துகொண்டார். "தமிழகத்தில் ஊழல் நடக்காத துறை இல்லை, கொலைகள் நடக்காத நாள் இல்லை, பாலியல் குற்றங்கள் நடக்காத நகரம் இல்லை. இவற்றில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவே தொகுதி மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம்" என்று அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தி பாஜக தொண்டர்கள் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.