
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாகமாக உயிரிழந்தனர். நூற்றூக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். இதனிடையே, விஜய் பிரச்சாரம் செய்த வாகனத்தை பறிமுதல் செய்யவும், அவர் மீது ஏன் வழக்கு பதியவில்லை என காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருந்தது. இதனையடுத்து விஜய் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை என்றைக்கும் தலைகுனிய விடவில்லை. யார் தலைகுனிய விட்டார்கள் என்பது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த வார்த்தைகளை பார்த்தால் தெரியும். தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாட்டில் யாராவது கிடைப்பார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது.
தவெக தலைவர் விஜய் காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை. யாரையும் அனாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும். தவெக தலைவர் விஜய்க்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதில் இருந்து விஜய் பாஜகவின் C டீம் என்பது உண்மையாகிறது. இதை முதன்முதலில் சொன்னது நான் தான். தவெக-வினர் நீதிமன்றம் குறித்து பேசுவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். விஜயை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.