காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற விஜயதாரணிக்கு மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களவைத் தேர்தலில் பாஜக 19 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பாமகவுக்கும், 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸுக்கும், 2 தொகுதிகள் அமமுகவுக்கும், ஒரு தொகுதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கும் (ஓபிஎஸ் அணி) ஒதுக்கப்பட்டுள்ளது. ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ், பச்சமுத்து, ஏசிஎஸ் ஆகியோரது கட்சி தாமரை சின்னத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது.
தொடர்ந்து, பாஜக தனது வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை தென் சென்னையிலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயதாரணியின் பெயர் இடம்பெறவில்லை.
விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதாரணி. இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்த செல்வபெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதால் அந்த பொறுப்பு தனக்கு கிடைக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்தார். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது: மம்தா பானர்ஜி கண்டனம்!
இதனால், அதிருப்தியில் இருந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து, அவருக்கு கன்னியாகுமரி தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அந்த தொகுதி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலாவது விஜயதாரணிக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியான பட்டியலில் விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி போட்டி. pic.twitter.com/pHwhEzcOFR
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
அதேசமயம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு சுமார் 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தொகுதியில் விஜயதாரணியின் பெயர் ஏற்கனவே டேமேஜாகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களிலும் கூட காங்கிரஸ் கட்சிக்குத்தான் அந்த தொகுதி மக்கள் வாக்களித்தார்களே தவிர விஜயதாரணிக்கு அல்ல என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்குவங்கியும் உள்ளது. எனவே, காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள்.
பாஜகவுடன் அண்மையில் தனது கட்சியை இணைத்த சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமாருக்கு விருதுநகரில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. ஆனால், நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட விஜயதாரணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.