தி.மலை தீபத் திருவிழா..! அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்..! அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

By Ajmal KhanFirst Published Dec 6, 2022, 7:51 AM IST
Highlights

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மகா தீபம்- குவியும் பக்தர்கள்

அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரிகள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் உள்ள அம்மன் சன்னதி விநாயகர் சன்னதி முருகன் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதிகள் பரணி தீபத்தினை ஏற்றினர். இந்த பரணி தீப தரிசனத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர் அண்ணாமலையாருக்கு அரகரா பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று மாலையில் பஞ்சமூர்த்திகள் தரிசனம்,அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை தொடர்ந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. திருவண்ணாமலை தீப திருவிழாவில்  30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு  திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

கார்த்திகை தீபத்தையொட்டி தி.மலையில் இன்று மகாதீபம் ஏற்றம்… பாதுகாப்புக்காக 13 ஆயிரம் போலீஸார் குவிப்பு!!

click me!