குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று இத்திட்டத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் மாபெரும் திட்டம் இது. அரசு விதித்திருக்கும் விதிமுறைகளின்படி, தகுதி பெற்ற 1.06 கோடி பெண்கள் இத்திட்டத்தின் கீழ் மாதா மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெறப்போகின்றனர். எந்த விதிமான தவறும் வந்துவிடாமல் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
இத்திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்றுள்ள பெண்கள் பலரிடம் உரையாடியபோது, இத்திட்டம் குடும்பப் பெண்களுக்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஆயிரம் ரூபாய் தொகை கிடைத்தால் அதை மாதா மாதம் எப்படி செலவு செய்யலாம், பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன என்று பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
undefined
சலுகை விலையில் வழங்கப்பட்ட பள்ளிப்பாளையம் சிக்கன் பிரியாணி ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்
"குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளின் கல்விக் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். மாதா மாதம் வரும் தொகையை படிப்புச் செலவுக்காக சேமித்து வைக்கலாம்" என்று ஒரு பெண்மணி கூறுகிறார்.
மற்றொரு பெண்மணி கூறுகையில், "கஷ்டப்பட்ட பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது நல்லது. அரசு ஊழியர்களுக்கு எல்லாம் கொடுக்காமல் கஷ்டப்படும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கொடுப்பது ரொம்ப பயனுள்ளதுதான்." என்கிறார்.
"வியாபாரத்தில் ஒருநாள் 300, 400 ரூபாய் வருமானம் கிடைக்கும். சில நாள் பெரிய அளவுக்கு வியாபாரம் இல்லாமலும் போகும். அப்படி இருக்கும்போது சில நாட்களில் கஷ்டமாகத்தான் இருக்கும். அரசு எங்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பது ரொம்ப உதவியாக இருக்கும். மருந்து மாத்திரை செலவுக்கு வைத்துக் கொள்வோம். வீட்டுச் சாமான்கள் வாங்க வைத்துக்கொள்வோம். கொடுக்கும் காசு நிச்சயமாக உதவியாகத்தான் இருக்கும்" என்கிறார் சாலையோரம் கூழ் விற்கும் பெண் ஒருவர்.
நாமக்கல் சிவியார்பாளையத்தில் கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி கணவருடன் வாழ்ந்துவரும் பெண் ஒருவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். குடும்பத்திற்கு வேறு வருமானம் இல்லாத நிலையில், ஆயிரம் ரூபாய் மாதா மாதம் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்.
பிள்ளைகள் யாரும் இல்லாத 63 வயதான மூதாட்டி ஒருவர் இளநீர் விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார். அவரிடம் பேசும்போது, "எங்களுக்கு கஷ்டங்கள் ரொம்ப. இந்த இளநீர் கடையை வைத்துத்தான் பிழைக்க வேண்டும். மாசம் 2,000 ரூபாய் மருந்து வாங்கவே செலவாகிறது. முதல்வர் ஐயா ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மருத்துவச் செலவுக்கு பயன்படும்" என்கிறார்.
தனியார் அலுலவகம் ஒன்றில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண்மணி ஒருவர், "முதல்வர் ஸ்டாலின் ஐயா மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவரை எல்லாம் நாங்கள் தெய்வமாக நினைத்துக்கொள்வோம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். மகள்கள் திருமணமாகி சென்றுவிட்டதால் தானும் கணவரும் மட்டுமே தனியாக வசிப்பதாகவும் கணவர் வாட்ச்மேனாக இருக்கிறார் என்றும் தெரிவிக்கிறார்.
மகளிருக்கு உதவி செய்ய நினைக்கும் நல்ல திட்டம் இது என்றும் அன்றாட தேவைகளுக்குக்கூட வழி இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இது நிச்சயம் பெரிய உதவியாக இருக்கும் என்றும் பல பெண்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வங்கிக் கணக்குகள் இல்லாத பெண்களுக்கு அரசே உதவி செய்து கூட்டுறவு வங்கிகளில் கணக்கு உருவாக்கித் தந்திருப்பதற்கு பயனாளிகள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.