
விருதுநகர்
குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று விருதுநகர் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கிராம மக்கள் எச்சரித்து இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், வெள்ளூர் கிராம மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின்போது வெற்றுக் குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில்ம் "சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளூர் கிராமத்தில் கிழக்கு பகுதியில் குடியிருந்து வருவோருக்கு அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரம் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகிறோம்.
இது குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. கிராம பஞ்சாயத்து நிர்வாகம் செயலற்றுவிட்டது. கிராமத்தில் உள்ள ஆழ்குழாய்கிணறு மற்றும் மேல்நிலைத்தொட்டி பயன்பாடு இல்லாமல் சேதம் அடைந்துவிட்டது.
எனவே, கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். காலதாமதம் ஆகும் பட்சத்தில் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் நடக்கும் நிலை ஏற்படும். எனவே, அதற்குள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
மேலும், வெள்ளூர் கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் 2000 ஏக்கர் நஞ்சை நிலத்துக்கு பாசன வசதி கிடைக்கிறது. இந்த நிலங்களை நம்பி 3000 விவசாயிகள் உள்ளனர்.
வெள்ளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதிக்காக கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் 15 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆழப்படுத்துவதுடன், சீமைக் கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். உடைப்புகளை சீரமைத்து மழைக் காலங்களில் பேரிடர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.