
விருதுநகர்
விருதுநகரில் ஒப்பந்தப்படி கூலியை உயர்த்தித் தர வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் 2-வது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் சமுசிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இங்கு, மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் 6000 விசைத்தறிகள் உள்ளன. இதில், சுமார் 7000 தொழிலாளர்கள் நேரடியாகவும் மற்றும் பாவு ஓட்டுதல், சாயப் பட்டறை, கண்டு போடுபவர்கள் என 8000 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு, ,மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, 100 மீட்டர் துணி உற்பத்திக்கு ரூ.76, கடந்த 2017-ல் ரூ.82, இந்தாண்டு ரூ.87 தர முடிவு எடுக்கப்பட்டது.
இந்தாண்டு கடந்த 1 ஆம் தேதியே கூலி உயர்வு வழங்க வேண்டிய நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, கூலி உயர்வு கோரி கடந்த திங்கள்கிழமை (அதாவது நேற்று முன்தினம்) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.
இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு தரப்பினரும் முயன்று வரும் நிலையில், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் இரு தரப்பினரையும் புதன்கிழமை (அதாவது இன்று) அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளராம்.