
நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டார், அதன்படி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற வைர விழாவில் பங்கேற்று, அங்கிருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதனை அடுத்து, அடுத்த நிகழ்ச்சியாக நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு சிறு, குறு கடன் உதவி வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசினார்.
கோவையில் ஒரே நாளில் 3,749 கோடி கடன் வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அப்பொழுது கீழே குழுமி இருந்த மக்களிலிருந்து ஒருவர் எழுந்து, தனக்கு வங்கிக் கடன் மறுக்கப்படுவதாகவும், வங்கியில் உரிய காரணம் கூறப்படுவதில்லை என்றும் கூறி, அதற்கு பதில் கூறுமாறு சதீஷ் என்ற அந்த நபர் கூச்சலிட்டார். உடனே அந்த நபரை அருகில் இருந்த பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்ட நிலையில், அங்கிருந்த போலீசார் அவரை தனியே அழைத்து செல்ல முற்பட்ட பொழுது பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை கண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், சதீஷ் என்ற அந்த நபர் என்பவரை மேடை ஏறி தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தெளிவாக கூறினால், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக கூறினார்.
உடனடியாக மேடை ஏறி பேசிய சதீஷ் என்ற அந்த நபர், தான் ஒரு தொழிலதிபர் என்றும், பெருந்தொற்று காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தில் இருந்த நிலையில், சுமார் 40 லட்சம் ரூபாய் லோன் கேட்டு வங்கியிடம் சென்றதாகவும். ஆனால் அவர்கள் லோன் தர மறுப்பதாகவும், உரிய காரணத்தை அவர்கள் கூறுவதில்லை என்றும் கூறி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இதை கேட்ட நிர்மலா சீதாராமன் அவர்கள் கடன் உதவி வழங்க தேவைப்படும் அனைத்து உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் படியும், பின்னர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் உறுதி அளித்தார். இதனால் அந்த மேடையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.