
இதுகுறித்து இன்று திங்கட்கிழமை மார்ச் 4ம் தேதி வெளியான அறிக்கையில் பிணவருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் கற்றல் எவ்வித தொய்வும் ஏற்படாமல் அவர்களுக்கான உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்கு தடை இன்றி மாணவர்களை சென்றடையும் வண்ணம் நேரடி பயனர் பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இப்பணி எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவரும் பள்ளி மூலமாகவே வங்கி கணக்கு தொடங்கிடும் வசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த தருணத்திலேயே ஆதார புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெரும் அளவில் குறைக்கப்படும். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித் தொகையினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி படிப்பை முடித்து உயர் கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேரத்திலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் தருணத்திலும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நான்கு வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன.
இந்த நான்கு வகை சான்றிதழ்களை பெறுவதற்கு தற்பொழுது தமிழக அரசு இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தை குறைத்துடும் வகையில் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே வரும் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும்பொழுது தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கும் போது அதன் விவரங்கள் கல்வி மேலாண்மை தகவல் முறை மெய் தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தளத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நல்வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
142 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடியின் குடும்பம்: லல்லுவுக்கு அண்ணாமலை பதில்!