13 மணி நேரம் தொடரும் போராட்டம் ! குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க முடியாமல் திணறல் !!

By Selvanayagam PFirst Published Oct 26, 2019, 7:14 AM IST
Highlights

திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே, மூடாமல் வைத்திருந்த ஆழ்துளைகிணற்றில் விழுந்த, 2 வயது குழந்தையை மீட்க, தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட 13 மணி  நேரத்துக்கு மேலாக சிறுவனை மீட்க முடியாமல் தீயணைப்பு படையினர் திணறி வருகின்றனர்
.

திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி.இவர்களின் மகன் சுஜீத் வில்சன், 2. ஆரோக்கியராஜ் வீட்டுக்கு பக்கவாட்டில், அவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. மழை பெய்ததால், சோளம் பயிரிட்டுள்ளனர். நிலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, தூர்ந்து போன ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் உள்ளது.

நிலத்தில், ஒரு அடிக்கு மேல் சோளம் வளர்ந்துள்ளது. நேற்று மாலை, 5:30 மணியளவில், கலாராணி மற்றும் சிலர், வீட்டின் முன் இருந்துள்ளனர்.பக்கவாட்டு நிலத்தில், சுஜீத் வில்சன் விளையாடிக் கொண்டிருந்தான்.திடீரென குழந்தையின் அலறல் கேட்டுள்ளது. ஓடிச் சென்று பார்த்தபோது, மூடாமல் விட்ட ஆழ்துளைகிணற்றில், சிறுவன் விழுந்தது தெரிந்தது.

தகவலறிந்து, மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சிறுவன், 20 - 25 ஆடி ஆழத்துக்குள் இருப்பது தெரிந்தது. ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி, தீவிரமாக நடந்தது.ஒருபுறம் குழந்தையை மீட்க, தீயணைப்பு துறையினர் போராட, மறுபுறம், குழந்தைக்கு எதுவும் நடக்காத வகையில், டாக்டர்கள் குழுவினர், ஆழ்குழாய் உள்ளே ஆக்சிஜன் செலுத்தினர்.குழிக்குள் விழுந்த குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், குழந்தையை கண்காணிக்க, கேமராவும் பொருத்தப்பட்டது.

மணிகண்டன் என்பவர் வடிவமைத்த பிரத்யோக கருவி வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடந்தது .இம்முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, பின்னர் கோவையிலிருந்தும் மீட்பு குழுவினர் வந்து முயற்சித்தனர். 

இந்த முயற்சியும் தோல்வியடைந்ததால். மீண்டும் பக்கவாட்டில் பொக்கலைன் மூலம் நாலாபுறம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி நடந்து வருகிறது. 

15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால் பள்ளம் தோண்டும் பணியும் கைவிடப்பட்டது. கோவை, மதுரை குழுவினர் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் நாமக்கல் குழுவும் குழந்தையை மீட்க முயற்சி எடுத்தது. மேலும் புதுக்கோட்டையிலிருந்து வீரமணி என்பவர் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து முயற்சி மேற்கொண்டது.

பல்வேறு குழுக்களின் பல மணி நேர போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில் குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னையிலிருந்து விரைந்துள்ளது.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 அடியிலிருந்து 68 அடிக்கு கீழே சென்று விட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் பதற்றத்துடன் உள்ளனர். குழந்தையின் தாய் மயக்கம் அடைந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!