
தருமபுரி
சுத்தத்தில் சிறந்து விளங்கும் கிராம ஊராட்சிக்கு மத்திய அரசின் சார்பில் விருதகள் வழங்கப்பட உள்ளன என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரியில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார்.
அப்போது ஆட்சியர் கே. விவேகானந்தன் பேசியது: "மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பில், டிசம்பர் 20-ஆம் தேதி கிராமங்களின் தூய்மை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராமத்தின் தூய்மை தர நிலையை மதிப்பீடு செய்ய இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
கிராமங்களின் தூய்மை தரநிலை மதிப்பீடு மற்றும் சான்றிதழ் 2018-ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில், அனைவருக்கும் கழிவறை வசதி, பொது இடங்களில் குப்பை இல்லாத நிலை மற்றும் அனைத்து வீடுகளின் அருகே கழிவுநீர் தேங்காத நிலை ஆகியவற்றிற்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
எனவே, இவற்றைப் பின்பற்றும் கிராம ஊராட்சியைச் சிறந்த ஊராட்சியாகத் தேர்வு செய்து மத்திய அரசின் சார்பில், விருதுகள் வழங்கப்படவுள்ளன" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், வட்டாட்சியர் ஜெயலட்சுமி, உதவி திட்ட அலுவலர் இராஜமாணிக்கம், தூய்மை பாரத இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.