
திருவள்ளூர்
திருவள்ளூரில் பம்பு செட்டில் குளிக்கச் சென்ற சிறுமிகள், நிலத்தில் விழுந்து கிடந்த மின்கம்பியைத் தெரியாமல் தொட்டதால் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். இருவரும் சகோதரிகள் ஆவர். மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு (35). இவரது மனைவி செல்வி (30). இவர்கள் கூலி வேலை செய்கின்றனர்.
இவர்களது மகள்கள் சௌமியா (8), ரம்யா (6) ஆகியோர் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பள்ளி முடிந்து நேற்று மாலை வீட்டிற்கு வந்தனர்.
வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டில் குளிப்பதற்காக சகோதரிகள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது நிலத்தில் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில், அதில் இருந்த மின்கம்பிகள் தரைமட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.
இந்த கம்பிகள் மீது தெரியாமல் சிறுமிகளின் கை பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குளிக்கச் சென்ற மகள்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் தேடிச் சென்றபோதுதான் அவர்கள் மின்கம்பியில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்து அவர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். உடனே அந்த மின்கம்பத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்த பொன்னேரி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு சிறுமிகளின் உடல்களையும் கைப்பற்றி உடர்கூராய்வுக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சார வாரியத்தின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டினர்.
சிறு குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் இந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.