
திருவள்ளூர்
அதிகாரிகள், டாஸ்மாக் சாராயக் கடையை அமைக்கமாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு மீண்டும் அதனை அமைக்க ஏற்பாடுகளை செய்ததால் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், ஆட்சியர் அலுவலகம் இரண்டு மணிநேரம் முடங்கியது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐயத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் சட்டென்று உட்கார்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறியது:
“நாங்கள் சிறுகளத்தூர் பகுதியில் வசித்து வருகிறோம். செவ்வாப்பேட்டை நெடுஞ்சாலை ஓரமிருந்த இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகள் கடந்த 1-ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் மூடப்பட்டது.
அந்த இரண்டு கடையையும் செவ்வாப்பேட்டையை அடுத்துள்ள ஐயத்தூர், சிறுகளத்தூர் பகுதியில் திறக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வந்தது.
இதையறிந்த நாங்கள் கடந்த 8-ஆம் தேதியன்று எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினோம்.
அப்போது அங்கு வந்த தாசில்தார் மற்றும் அதிகாரிகள் எங்களிடம் இனிமேலும் இந்த இடத்தில் டாஸ்மாக் சாராயக் கடைகள் வராது என்று உறுதியளித்தனர். இதனை நம்பி நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.
ஆனால் கடந்த சில நாள்களாக மீண்டும் டாஸ்மாக் சாராயக் கடைகள் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதை கேள்விப்பட்டு நாங்கள் மிகவும் வேதனையடைந்தோம்.
எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்” என்றுத் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட அவர் அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனால் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகமே 2 மணி நேரத்திற்கு முடங்கியது.