
திருப்பூர்
திருப்பூரில் ‘கார்பைடு கல்’ கொண்டு பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்களை சேமிப்புக் கிடங்கில் இருந்து பறிமுதல் செய்து குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் ஒன்றுக் கிடைத்தது. அதில், “மாம்பழ சேமிப்புக் கிடங்குகளில் ‘கார்பைடு கல்’ என்ற ரசாயன கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது” என்று.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் திருப்பூர் மாநகர உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்கவேல், முருகேசன் ஆகியோர் நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தை பகுதிக்குச் சென்றனர்.
அங்குள்ள மாம்பழ சேமிப்புக் கிடங்கில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் ஆறு சேமிப்புக் கிடங்கில் சோதனை நடத்தியதில், மூன்று சேமிப்புக் கிடங்கில் ‘கார்பைடு கல்’ மூலமாக மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சேமிப்புக் கிடங்கில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள ஐந்து டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்புவதற்காக மாம்பழத்தின் மாதிரிகளை அதிகாரிகள் எடுத்தனர். பின்னர், மாம்பழங்களை லாரிகளில் ஏற்றி திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.
‘கார்பைடு கல்’ மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்த குடோன் உரிமையாளர்கள் மூன்று பேர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.