
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற கோரி பெண்கள் இரண்டு நாள்கள் தொடர்ந்து போராடி வருவதை பார்த்து அதிகாரிகள் அந்த கடை இழுத்து மூடினர். இதனால், போராடிய மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 89 சாராயக் கடைகள் அகற்றப்பட்டன. இந்த கடைகளை வேறு இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதன்படி, மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்குள் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க இடம் தேர்வு செய்வதை அறிந்த மக்கள், ஆங்காங்கே திரண்டு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர்.
இந்த வகையில், முத்தையாபுரம் பிராதான சாலையோரத்தில் அகற்றப்பட்ட ஒரு கடை, கணேஷ்நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் புதிதாக மாற்றப்பட்டு கடந்த 8-ஆம் தேதி இந்த கடை திறக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அன்றைய நாள் கடை மூடப்பட்டது. பின்னர், அந்த பகுதி மக்கள், 10-ஆம் தேதி காலையில் ஆட்சியர் ரவிகுமாரிடம், அந்த கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என மனு அளித்தனர்.
இந்த நிலையில் அன்று மதியம் மீண்டும் கடை திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள், அன்று முதல் கடந்த இரண்டு நாள்களாக அந்த கடையை அகற்ற வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.
இதற்கிடையில், நேற்று டாஸ்மாக் சாராயக் கடை பணியாளர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் சாராயக் கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் கடையை திறக்க முடியாமல் பணியாளர்கள் திரும்பிச் சென்றனர். பின்னர், டாஸ்மாக் சாராயக் கடை அருகே பந்தல் அமைத்து பெண்களுடன் மக்கள் தொடர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி உதவி ஆணையர் (கலால்) விஜயா, மாவட்ட டாஸ்மாக் சாராயக் கடை மேலாளர் சௌந்தரராஜன், தாசில்தார் ராமச்சந்திரன், துணை தாசில்தார்கள் செல்வக்குமார், ஞானராஜ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் உமாமகேசுவரன், வருவாய் ஆய்வாளர் செல்வபூபதி மற்றும் காவலாளர்கள் அப்பகுதிக்கு விரைந்துச் சென்றனர்.
அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, எம்.சவேரியார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் சாராயக் கடை மூடப்படும். இங்கு உள்ள சரக்குகள் ஒரு வாரத்தில் அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பின்னர், அந்த வெற்றியை பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
பின்னர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து வெற்றிக் களிப்புடன் கலைந்து சென்றனர்.