
தூத்துகுடி
மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடல் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) முதல் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கடல் பகுதிகளில் ஏப்ரல் முதல் மே மாதம் வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும்.
இந்த நாள்களில் கடலில் அதிக அளவில் மீன் பிடிக்கப்பட்டு வந்ததால் மீன் வளம் குறைந்து வந்தது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் 15–ஆம் தேதி முதல் மே மாதம் 29–ஆம் தேதி வரை 45 நாள்கள் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது.
இந்த ஆண்டும் நாளை முதல் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 248 விசைப்படகுகளும், வேம்பாரில் 25 விசைப்படகுகளும், தருவைகுளத்தில் 139 விசைப்படகுகளும் உள்ளன. இந்த படகுகள் அனைத்தும் தடைக்காலத்தில் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்படும்.
இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கடல் பகுதிகளிலும் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு நாளை முதல் 45 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.