
வாள், பயிற்சி துப்பாக்கியை ஆயுதபூஜையில் வைத்து வழிபட்டதாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது, சென்னை மற்றும் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்ப்பட்டது. இதற்கு, விளக்கம் அளிக்க வந்த, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விளக்கம் அளித்தார். அதில் சிலர், இளைஞர்களை தனக்கு எதிராக தூண்டி விட முயற்சிப்பதாக கொந்தளிப்புடன் கூறினார்.
தொண்டர்கள் பரிசளித்த வாள் மற்றும் பயிற்சி துப்பாக்கி ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து ஆயுதபூஜை வழிபாடு நடத்தியதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் அப்துல் ரஹீம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆயுத பூஜையில் துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வழிபட்டார். அது உரிமம் பெற்ற துப்பாக்கியா? ஆயுதபூஜையில் தொழில் சம்பந்தப்பட்ட பொருட்கள் அல்லாமல் இதுபோன்ற ஆயுதங்களை வைத்து வழிபட சட்டத்தில் இடம் உள்ளதா? சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு விவரம்: விஜயதசமியான கடந்த 10ம் தேதி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், அவரது வீட்டில் பல்வேறு ஆயுதங்களை வைத்து பூஜை நடத்தியுள்ளார்.
இதுபோன்ற ஆயுதங்களை, தனி நபர் வைத்துள்ளது சட்டத்துக்கு விரோதமானது. எனவே, அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரிடம் இதுபோல எவ்வளவு ஆயுதங்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து, அவற்றைக் கைப்பற்றி, உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு அர்ஜுன் சம்பத் நேற்று முன்தினம் மாலை வந்தார். அவர் கூறும்போது, ‘‘எனது மகன் ரைபிள் கிளப் உறுப்பினராக இருக்கிறார். அவர் பயன்படுத்தும் பயிற்சி துப்பாக்கி (AIR GUN), பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் எனக்கு பரிசாக அளித்த வாள் போன்றவற்றை என் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தேன்.
அந்த புகைப்படத்தை என் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். இதை விமர்சித்துள்ளவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். என் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து விளக்கம் அளிக்க வந்துள்ளேன். நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை’’ என்றார்.
கோவையில் அர்ஜுன் சம்பத் கூறும் போது, “எனக்கு ஆயுதக் கலாச்சாரத்தில் நம்பிக்கை கிடையாது. துப்பாக்கி, வெடிகுண்டு கலாச்சாரத்தில் நம்பிக்கை உள்ள சில அமைப்புகள்தான், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்புகின்றன. இதன் மூலம் இளைஞர்களை எனக்கு எதிராக தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையே, அர்ஜூன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார், இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தல், அனுமதியின்றி ஆயுதங் களை காட்சிப்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.