
காஞ்சிபுரத்தில் பல இலட்சம் ரூபாய் செலவில் ஊஞ்சல், சறுக்கு மனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா தற்போது முறையான பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது.
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உள்பட்ட 49-ஆவது வார்டில் உள்ளது வேதாச்சலம் நகர். இப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என குடியிருப்போர் நலச்சங்கம், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில், 10 சென்ட் இடத்தில் சுமார் ரூ. 25 இலட்சம் மதிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா உருவாக்கப்பட்டது.
இப்பூங்காவில் அழகிய செயற்கை நீரூற்றுகள், இருக்கைகள், புல் தரைகள், சறுக்கு மனை, ஊஞ்சல் மற்றும் அனைத்து சிறப்பம்சங்களுடன் கண்கவரும் வகையிலான பூ செடிகளும்இருந்தது.
ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள், இருக்கைகள் என அனைத்தும் பழுதடைந்தன.
மேலும், பூங்காவில் புதர் மண்டி விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளது. பூங்காவைச் சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு வலை வேலியும், தூண்களும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதால் பூங்கா, களை இழந்து காணப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து வேதாச்சலம் நகரில் பராமரிப்பின்றி உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.