மாணவி தற்கொலை..செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும்.. வீடியோ எடுத்த நபர் நாளை ஆஜராக உத்தரவு..

Published : Jan 24, 2022, 07:40 PM IST
மாணவி தற்கொலை..செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும்.. வீடியோ எடுத்த நபர் நாளை ஆஜராக உத்தரவு..

சுருக்கம்

தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோவை பதிவு செய்த நபர், வல்லம் டிஎஸ்பி முன்பு நாளை காலை நேரில் ஆஜராகி செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘‘எனது மகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். விடுதி வார்டன் சகாயமேரி, நிர்வாகி ராக்லின்மேரி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முருகானந்தம் அவரது மனைவி ஆகியோரிடம் தஞ்சாவூர் 3-வது நீதித்துறை நடுவர் பெற்ற ரகசிய வாக்குமூலத்தின் நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ பதிவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவில் உள்ளது மாணவியின் உண்மையான குரல் தானா, வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிபடுத்த வேண்டியதுள்ளது.

இதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும். அதனை சென்னையிலுள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு நாளையே டிஎஸ்பி அனுப்பி வைக்க வேண்டும். தடயவியல் மைய இயக்குநர் செல்போனை ஆய்வு செய்து உண்மைத் தன்மை குறித்து அதே நாளில் அறிக்கை அளிக்க வேண்டும். மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் ஆய்வு மைய அலுவலர் ஜன. 27-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மாணவியின் பெற்றோரும் நாளை காலை டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு மீண்டும் ஜன.28-ல் விசாரிக்கப்படும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்
Tamil News Live today 08 December 2025: 1 லட்சம் பேர் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலா பின்னுக்கு தள்ளி சாதனை.. யார் தெரியுமா?