வேகமெடுக்கும் கொரோனா... ஜன.26 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து!!

By Narendran SFirst Published Jan 24, 2022, 6:32 PM IST
Highlights

தமிழகத்தில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம், மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினம், ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினம், அக்டோபர் 02 ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். மேற்கண்ட் நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து இதில் கொள்வார்கள். சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

இதன் மூலம் கிராமசபை கூட்டத்தில் அந்தந்த ஊர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைத்து வருகிறது. அதாவது கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற முடியும். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஜனவரி 26 ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு கிராம பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் சுற்றறிக்கை அனுப்பி உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

click me!