
காற்று மாசினை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் படி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒருமுறை பொதுஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் வைத்தது.
இந்த நடைமுறையை செயல்படுத்தும் விதமாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தனது இல்லத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்தே ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதே போல் வாரம் வாரம் திங்கள்கிழமை அல்லது புதன்கிழமை நடந்தே அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மற்ற அலுவலர்களையும் இதை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களும் முடிந்தளவு இதனை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற தூய்மையான போக்குவரத்தின் மூலம் உடல்நலம் கூடுதலாக வலுப்பெறும். உடற்பயிற்ச்சிகாக சைக்கிள் ஓட்டுவதையும் நடைபயிற்சி மேற்கொள்ளுவதையும் போக்குவரத்தாக பயன்படுத்தினால் உளவியல் தடைகளை எதிர்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார். பொதுபோக்குவரத்து அடிக்கடி பயன்படுத்துவதின் மூலம் சிரமமின்றி அலுவலகம் வரவும் நகரத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும் முடியும் என்று அவர் கூறினார்.
இதேபோல் கடந்த வாரம் நாகை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சுழல் மாசுப்படுவதை தடுக்கும் விதமாக நாகையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காடம்பாடி பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ஆட்சியர் அருண் தம்பு ராஜ், அலுவலகத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்தடைந்தார். அவருடன் அதிகாரிகளும் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தனர்.
பெருகிவரும் வாகன பயன்பாடு மூலம் காற்றில் அதிகளவு நச்சு வாயுக்கள் கலக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் நீடித்த ஆயுள் வாழ தூய்மையான காற்றினை சுவாசிப்பது அவசியமாகிறது. அந்த நோக்கில், காற்றில் மாசுக்கள் கலப்பதை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நாடுகள் முன்மாதிரியான திட்டங்களை வகுத்து வருகின்றனர். மேலும் தற்போது நடைபெற்ற பருவ நிலை மாற்ற மாநாட்டில் கூட பசுமை குடில் வாயுக்கள், இயற்கை சீற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியர்கள் எடுத்துவரும் இந்த மாற்று நடவடிக்கைகள், மக்களிடையே நல்விதமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தாலும் தன்னை விளம்பரத்தும் நோக்கில் மட்டும் நின்றுவிட கூடாது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.