சட்டப்பேரவையில் ராமேஸ்வரம் விமான நிலையம் குறித்து செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிஆர்பி ராஜா, திராவிட மாடல் ஆட்சி பல நூறு ஆண்டுகள் நிலைக்கும் என்றார். மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Tamil Nadu assembly debate : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான இரண்டாவது நாள் பொது விவாதமானது நடைபெற்றது. இதில் வினாக்கள் விடைகள் நேரத்திற்கு பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு பல்வேறு கேள்விகளை எழுப்பி பேசினார். திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் எப்படி ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த, டிஆர்பி ராஜா, பல 100 ஆண்டுகளுக்கு திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்காக சப்போர்ட் செய்த எடப்பாடி.! உற்சாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்
தமிழக முதலமைச்சர் ஆட்சியில் கோவை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் கோவைக்கு என்ன செய்தீர்கள்? என்ன துரோகம் செய்தீர்கள் என்று கோவை மக்கள் முழுமையாக அறிவார்கள் எந்த ஒரு திட்டத்தையும் முடிக்கவில்லை என கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் அதே கோவைக்கு சென்று வாக்களிக்காத மக்களும், ஏன் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று ஏங்கும் அளவுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அங்கே நிலம் எடுக்கப்பட்டு கோவை விமான நிலைய நிர்வாக பணிக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். விமான நிலையம் அமைப்பது ஒன்றும் தெர்மோகோல் விடுவது போல அல்ல எனவும் செல்லூர் ராஜூவை விமர்சித்தார்.
விமான நிலையம் அமைப்பது ஜீபூம்பா வேலையா.?
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சட்டமன்ற உறுப்பினரான செல்லூர் ராஜு, "தெர்மாகோல்... தெர்மாகோல்... என ஓட்டுறீங்களேப்பா...? அதிகாரிகள் சொல்லித்தானே எல்லாரும் செய்கிறோம். பரவா இல்லை ராஜா வாழ்க... உங்கள் பையன் காலத்திலாவது விமானநிலையம் வர வேண்டும்", என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, விமான நிலையம் கட்டுவது ஜீபூம்பா வேலையா. பட்ஜெட் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.