அதிமுகவில் அதிகார மோதல் வலுக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். சமீபத்திய சட்டமன்ற நிகழ்வுகள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
Edappadi Palanisamy vs Sengottaiyan : அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேர்தலில் வாக்குகள் பிரிந்து எதிர்கட்சிகள் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஓபிஎஸ் உள்ளிட்ட பிரிந்து சென்ற தலைவர்களை இணைக்க வாய்ப்பே இல்லையென உறுதியாக கூறிவிட்டார்.
இபிஎஸ்க்கு எதிராக செங்கோட்டையன்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மூத்த தலைவராக உள்ள செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போரக்கொடி தூக்கியுள்ளார். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகளின் பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அங்கு வைக்கப்பட்ட பேனர்களில் ஜெயலலிதா படம் இல்லையென கூறி அந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனையடுத்து ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்க மறுத்தார். இதனையடுத்து தமிழக சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.
இபிஎஸ்- செங்கோட்டையன் சமரசமா.?
இந்த சூழ்நிலையில் தனியார் நிகழ்வில் கலந்து கொண்ட செங்கோட்டையன், பிரதமர் மோடியை ஆகா ஓகோவென புகழ்ந்து பேசினார். இதனால் செங்கோட்டையன் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. எனவே எந்த நேரத்திலும் அதிமுகவை உடைத்து தனி அணியாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழ்நிலையில் நேற்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது டிவிசன் வாக்கெடுப்பு கேட்டு அதிமுகவினர் முறையிட்டனர். இதன் நடைமுறைகள் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி இருந்த நிலையில் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி தகவலை தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக எடப்பாடி
நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு பேரும் பேசியது அதிமுக எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக செல்லு ராஜு சில விஷயங்களை பேசினார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சில விளக்கங்களை கொடுத்தார். இந்த நிலையில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் சபாநாயகர் இடம் முறையிட்டதை பரபரப்பாக பேசப்பட்டது.