Tirunelveli Retired Police Murder Case: நெல்லை டவுனில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜில். இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் ஜாகீர் உசேன் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இவர் தற்போது நெல்லை டவுனில் உள்ள முர்த்தின் ஜர்கான் தர்காவில் முத்தவல்லியாக இருந்து வருகிறார். தர்க்கா அருகே வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான 34 சென்ட் நிலம் தொடர்பாக இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பிரச்சனைகள் இருந்ததுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ரமலான் நோன்பை ஒட்டி இன்று காலை ஜாகீர் உசேன் பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். தொழுகையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் டவுன் காட்சி மண்டபம் அருகே ஜாகீர் உசேன் வந்துகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜாகீர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை சொன்ன ஒற்றை வார்த்தை.! அலறும் திமுக அரசு- ஒரு வாகனத்தையும் விடாத போலீஸ்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நிலத்தகராறில் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தான் கொலையாக வாய்ப்புள்ளதாக ஜாகீர் உசேன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலை சொன்ன ஒற்றை வார்த்தை.! அலறும் திமுக அரசு- ஒரு வாகனத்தையும் விடாத போலீஸ்
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.
ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என அண்ணாமலை கூறியுள்ளார்.