
தஞ்சாவூர்
செல்லாத நோட்டுகள் அறிவிப்பால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி வைப்புத்தொகை கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு தொழில் தொடங்க, குறைந்த வட்டியில் நிறைய பேருக்கு கடன் வழங்கப்படும் என்று செயல் இயக்குனர் ஆர்.சுப்பிரமணியகுமார் கூறினார்.
தஞ்சையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.சுப்பிரமணியகுமார், “தஞ்சை, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 93 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகள் உள்ளன. பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கடனுதவி வழங்கப்படுகிறது.
முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறலாம். தருண் திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எந்த தொழில் தொடங்கினாலும் வங்கி கிளை மேலாளர்கள் வழிகாட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மிகப்பெரிய மாற்றம் உருவாகும். இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. கையில் பணத்தை வைத்திருந்தால் வட்டி கிடைக்காது. அதுவே, வங்கியில் செலுத்தினால் வட்டி கிடைக்கும். அந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் வங்கிகளில் எடுத்து கொள்ளலாம்.
86 சதவீதம் அளவுக்கு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்த நடவடிக்கையால் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளன. பிரதமரின் அறிவிப்பால் பல நன்மைகள் கிடைக்கும். விலைவாசி உயர்வு குறைய வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தங்கள் கையில் வைத்துள்ள பணத்தை வங்கிகளில் செலுத்தி செக் புக் பெற்று கொள்ளலாம். அவற்றின் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம்.
வங்கிகளில் பணம் பெற பல வழிகள் உள்ளன. நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம் மின்னணு பண பரிமாற்றம் செய்யலாம். இந்த வசதியை பொதுமக்கள் பெற்று கொண்டால் மின் கட்டணம், பால் கட்டணம், நண்பர்களுக்கு பணம் கொடுத்தல் போன்றவை செய்யலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 3 ஆயிரத்து 394 கிளைகள் உள்ளன. 500, 1,000 ரூபாய் செல்லாது என்ற நடவடிக்கை மூலம் ரூ.10500 கோடி வைப்புத்தொகை கிடைத்துள்ளது. இந்த வைப்புத்தொகை மூலம் குறைந்த வட்டியில் அதிகம் பேருக்கு கடன் வழங்க முடியும். புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னையில் வழங்கப்படுகிறது. தஞ்சைக்கு ஓரிரு நாட்களில் வந்துவிடும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.