ஏடிஎம்க்கு பாடை கட்டி போராட்டம் - சங்கு ஊதிய 2 பேர் கைது

First Published Nov 26, 2016, 10:45 AM IST
Highlights


ஏடிஎம் மையம் அருகே பாடை கட்டி ஒப்பாரி போராட்டம் நடத்தி, சங்கு ஊதிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட செலவு, அத்தியாவசிய பொருட்கள் எதையும் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அரசின் இந்த திடீர் முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மேலும், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர் க்கால கூட்டத் தொடர், நாள் தோறும் ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாக விரயமாகிறது. இதனை கண்டித்து, சமூக அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவில்பட்டி நகரில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த முதல் இன்று வரை ஒருசில ஏடிஎம்கள் மட்டுமே செயல்படுகிறது. மேலும் திறந்து இருக்கும் ஏடிஎம்களிலும் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை கண்டித்தும், அனைத்து ஏடிஎம்களும் செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் காமராஜ் சிலை அருகேயுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தின் முன்பு பாடை கட்டி, சங்கு ஊதி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து கிழக்கு காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் சென்னை தங்கசாலை பகுதியில் இதேபோன்று போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!