
புதுக்கோட்டை
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கிறதா? என்பதை மருத்துவர்கள்தான் உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியர் சு.கணேஷ் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், “அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்” நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சு.கணேஷ் தலைமை வகித்தார். அப்போது, அவர் பேசியது:
“தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
மாவட்ட நலச்சங்கம், குடும்ப நல அறுவைச் சிகிச்சை தர நிர்ணயம், தனியார் மருத்துவமனைகள் குடும்பநல அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அங்கீகாரம் வழங்குதல், அரசு அலுவலர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், நோயாளர் நலச்சங்கம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், ரத்தவங்கி செயல்பாடு, காசநோய் திட்டம், சித்த மருத்துவம், மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை விவரம், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, குழந்தை பிறப்பு விகிதம், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட விவரம், அறுவைச்சிகிச்சை, மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள், செலவினம், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட எண்ணிக்கை, பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கிய விவரம், காசநோயாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் சிகிச்சைகள், எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தொடர் கூட்டு மருந்து சிகிச்சைகள், நம்பிக்கை மையத்தில் வழங்கப்படும் ஆலோசனைகள், கண் பரிசோதனை முகாம், கண் பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இணை இயக்குநர் (பொது சுகாதாரம், ஊரக நலப்பணிகள்) சுரேஷ்குமார், துணை இயக்குநர்கள் புதுகை பரணீதரன், அறந்தாங்கி கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.