டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி தவிர பிற அரசு பணி நியமனங்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், “தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்துவதாக தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், 12 மசோதாக்கள், 3 துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் 4 நடவடிக்கை உத்தரவுகள், கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பான கோப்புகள், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன கோப்பு உள்பட அரசு பணிகளில் முக்கியமான 14 காலிப்பணியிடங்களில் 10 பணியிடங்கள் ஆளுநரால் நிரப்பப்படாமல் உள்ளன எனவும் தமிழ்நாடு அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.
இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, கடந்த 2020ம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்வதாக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார். மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க ஆளுநர் ரவி ஒப்புதல்!
மேலும், எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை நிராகரித்துள்ளார் ஆளுநர் ரவி. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, 2020 ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
முன்னதாக, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி தவிர பிற அரசு பணி நியமனங்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி தவிர எஞ்சிய அரசு பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நன்னடத்தை காரணங்களால் சிறைக் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 580 பரிந்துரைகள் மாநில அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்றது. அதில், 362 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 165 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 53 பரிந்துரைகள் கிடப்பில் உள்ளதாஅக்வும் தமிழ்நாடு ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.