
ஜெ-வுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள்… : இன்று வெளியிடுகிறது அப்பல்லோ….!
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதா மரணம் குறித்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிடுகின்றனா்.
கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நிலை கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா மிகவும் சீரியஸாக இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பின்னர் இரவு 11.30 அளவில், 'முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டார்' என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது
சிகிச்சையின்போது இடையிடையே 'ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். சாப்பிட்டு வருகிறார்' என்றெல்லாம் அ.தி.மு.க வினரும், மருத்துவமனை நிர்வாகமும் சொல்லிவந்த நிலையில் எப்படி திடீர் மரணம் ஏற்பட முடியும்? நிச்சயம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது...என பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதா மரணம் குறித்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட தமிழக அரசும், அப்போலோ நிர்வாகமும் மவுனம் காப்பது ஏன் என அடுக்கடுக்கான சந்தேகங்களை , தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பி வந்தன.
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அஇஅதிமுகவில் ஜெயலலிதா விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடை இதுவரை கிடைக்காத நிலை நிலவி வருகிறது.ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கே இந்த கதி என்ற அளவுக்கு பொதுமக்களின் விரக்தியும் வெளிப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும், அப்போலோ மருத்துவமனையில் அதன் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியும் இன்று மதியம் தனித்தனியே பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்களை வெளியிடுகின்றனா்.அதனால் டாக்டர் பிரதாப் ரெட்டி மற்றும் ரிச்சர்ட் பீலே இருவரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.