மீண்டும் ஒரு ஆணையம் யாரை ஏமாற்ற? ஸ்டாலின் அறிவிப்பை கிழிச்சு தொங்கவிட்ட அண்ணாமலை!

Published : Oct 17, 2025, 09:07 PM IST
MK Stalin vs Annamalai

சுருக்கம்

தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஆணவக்கொலை தொடர்பாக புதிய ஆணையம் அமைத்திருப்பது கண்துடைப்பு என்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆணவக்கொலை தொடர்பாக மற்றொரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்றுவதற்காக என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளது எனவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

திமுக அரசின் அலட்சியம்!

“தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து (2021-2023), பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறையானது மூன்று ஆண்டுகளில் 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் திமுக அரசு அலைக்கழித்து வருகிறது.

இந்த நிலையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் ஏன் பேச மறுக்கிறார்?

ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?

இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?

மக்கள் வரிப்பணம் வீண்!

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால் இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?”

இவ்வாறு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது பதிவில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி