
Annamalai criticizes Stalin over Gaza : காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பல ஆயிரம் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் மரணம் அடைந்துள்ளனர். பலரும் உணவுக்கு வழியில்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காசாவில் நடைபெறும் போருக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்தனமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.
பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதநேய பண்போடு நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து இந்தக் கண்டன கூட்டத்தையைச் சார்ந்த அமைப்பு இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறது! பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாக நாம் வழங்குகிறோம். இதுதான் இந்தக் கண்டண இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது!
கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் 17 ஆயிரம் குழந்தைகள் -175 பத்திரிக்கையாளர்கள் - 125 ஐ.நா. ஊழியர்கள் என்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்; ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது!
ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும், உடனடியாக முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும்! அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
வருகின்ற 14-ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும்; அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ந்த நிலையில்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா? பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்? கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை! என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.