
திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள பெரியபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பெரிய மரங்கள் உள்ளது. மரத்தின் நிழலில் அருகே உள்ள வீடுகளில் வசித்து வரக்கூடிய லட்சுமணன், லட்சுமி, சென்றாயன், ராஜா ஆகியோர் மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாடி வந்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகேந்திரன் இங்கு சீட்டு விளையாட கூடாது என கூறியுள்ளார். இதனைக் கேட்காமல் தொடர்ந்து பல நாட்களாக சீட்டு விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்றும் மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாடி வந்துள்ளனர். அப்பொது மகேந்திரன் சீட்டு விளையாடக்கூடாது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சீட்டு விளையாடிய ராஜா, லட்சுமணன், சென்ராயன் ஆகியோர் மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தனது வீட்டில் வைத்திருந்த தோல் கழிவுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆசிட்டை எடுத்து வந்து நான்கு பேர் மீதும் ஊற்றியுள்ளார்.
ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த நான்கு பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய பள்ளப்பட்டி பகுதியில் ஆசிட் வீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.