'ஜாபர் சாதிக்குக்கு மறைமுகமாக உதவிய தமிழ்நாட்டு பாடநூல் கழகம்'; அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

By Rayar r  |  First Published Dec 16, 2024, 4:21 PM IST

ஜாபர் சாதிக்குக்கு தமிழ்நாட்டு பாடநூல் கழகம் மறைமுகமாக உதவியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.

பின்பு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் போதைப்பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்ததும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன்பிறகு இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமையும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

Tap to resize

Latest Videos

பின்னர் ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜாபர் சாதிக்குக்கு தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அண்னாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

undefined

ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022–2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

click me!