டிசம்பர் 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்கள் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமசை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதற்காக கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பை குறிக்கும் ஸ்டார்களை வீடுகளில் மாட்டி வருகின்றனர். வீடுகளில் வண்ண வண்ண விளக்குகளை பொருத்தி வருகின்றனர்.
மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்து வருகின்றனர். இப்படி கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்ட அறிவிப்பில், ''கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 24.12.2024 (செவ்வாய்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
undefined
24.12.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (28.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்'' என கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் உள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் 24ம் தேதியும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லுரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி கோட்டாறு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.