
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பூத் கமிட்டி மாநாடு
"நெல்லை மாநாட்டில் நாற்காலிகள் காலியாக இருந்ததாக சிலர் காணொளிகளைப் பரப்புகின்றனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அந்த மாநாடு, 99.5% பூத் ஏஜென்டுகள் கலந்துகொள்வதற்காக நடத்தப்பட்டது. அது தொண்டர்களுக்கான மாநாடு அல்ல, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கானது" என்று அண்ணாமலை விளக்கமளித்தார்.
காதல் திருமணங்களுக்கு ஆதரவு
காதல் திருமணங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜகவில் நாங்கள் அனைவரும் ஆணவக் கொலைகள் மீது கோபத்தில் இருக்கிறோம். அதற்காக கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அலுவலகத்திற்கும் பல காதல் ஜோடிகள் நியாயம் கேட்டு வருகிறார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.
"சாதிப் பிரச்சினை இந்து சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினை. நாம் அனைவரும் சமம் என்று சொன்னாலும், சில இடங்களில் சாதி மனநிலை இன்றும் இருக்கிறது. பள்ளிகளில் பாடத்திட்டத்தைச் சரிசெய்ய வேண்டும், அரசுகள் முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும். கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்" என அண்ணாமலை கூறினார்.
மைனராகக் கருதக் கூடாது
ஆணவக் கொலைகளில் ஈடுபடும் சிறார்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், "யாராவது ஒருவர் சாதியைக் காரணம் காட்டி கொலை செய்தால், அவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், அவர்களை மைனராகக் கருதக்கூடாது. 16, 17 வயதில் சாதிக்காக கொலை செய்தால்கூட அவர்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல் உரிய தண்டனை வழங்க வேண்டும்" என்றார். மேலும், "திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, இன்றும் சாதிப் பிரச்சினை இருக்கிறது என்றால், அது தோற்றுவிட்டது என்றுதான் அர்த்தம்" என்று கூறினார்.
என்.டி.ஏ. ஆட்சி அமைக்கத் தயாராகிவிட்டது
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்று கூறிய அண்ணாமலை, 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தயாராகிவிட்டது என்றார்.