
அண்ணா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம் துணைவேந்தரே இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் பல்கலைக் கழகத்தின் நிர்வாகப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன.
அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறவில்லை. இப்பல்கலைக் கழகத்தில் மட்டும் 2 லட்சம் இளநிலை, முதுநிலை பொறியியல் படித்த மாணவர்களும், 1500 பி.எச்டி மாணவர்களும் பட்டம் பெற முடியவில்லை.
இதனால், மேற்படிப்பு படிக்க இருந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.இதையடுத்து வரும் 19 ஆம் தேதி அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா நடத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் துணை வேந்தர் இல்லாமல் ஏன் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து அண்ணா பல்கலை கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் அருள் அறம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணையில் அரசு தரப்பு வாதம் நடைபெற்றது.
அதில் பல்கலை கழகங்களின் விதிப்படியே பட்டமளிப்பு விழா நடைபெறுவதாக அரசு தரப்பு தெரிவித்தது.இதனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கையெழுத்து செல்லாது என்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை எனவும், எனவே அண்ணா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடை விதிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.