
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை SIET சிக்னல் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து பாதித்து, பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை எஸ்ஐஇடி சிக்னல் அருகே மெட்ரோல் ரயில் சுரங்கப்பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் இன்று காலை சுமார் 5 மணியளவில் திடீரென சாலையின் நடுவில் சுமார் 4 அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. நேரம் கடந்து செல்லும்போது, வாகனங்கள் அதிகளவில் சென்றன.
திடீரென ஏற்பட்ட பள்ளத்தை அறியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் தங்களது பைக் முன் சக்கரம் சிக்கி கொண்டு அதை மீட்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். அதன் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் ஒன்றென வரிசையாக நின்றதால் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து மற்ற வாகன ஓட்டிகள், வந்து அந்த பைக்குகளை மீட்டு உதவி செய்தனர்.
இதற்கிடையில், இந்த போக்குவரத்து நெரிசல் அண்ணா மேம்பாலம் வரை நீண்டு கொண்டே சென்று விட்டது. இதையொட்டி கல்லூரி, பள்ளி, வேலைக்கு செல்வோர் கடும் சிரமம் அடைந்தனர்.
தகவலறிந்து போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு, சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து, வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைத்தனர். இன்று காலை முதல் தற்போதைய நிலவரம் வரை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், திடீர் பள்ளத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதே பகுதியில் மற்றொரு பள்ளம் ஏற்படாமல் இருக்க தடுப்பு ஏற்பாடுகளைசெய்ய வேண்டும். அதற்கு முன் வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.