
சென்னையில் தற்போது வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த மேலடுக்குச் சுழற்றி வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே காற்று அதிகமாக வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில்கள் உயரமான தூண்களுடன் கூடிய பாலங்களில் இயங்கி வருகின்றன. காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், அதனைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் படி, பலத்த காற்று வீசினால் அந்தக் காற்றின் வேகத்தைக் கண்டறிந்து ரயில்களை இயக்கும் வண்ணம் அனிமோ மீட்டர் பொருத்தப் படுவதாகக் கூறியுள்ளது.
குறிப்பாக, சென்னை விமான நிலையம், ஆலந்துர், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப் படும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
70 கி.மீ.. முதல் 90 கி.மீ., வரையிலான வேகத்தில் காற்று வீசினால், அதனைக் கண்காணித்து, ரயிலின் வேகத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், உடனே ரயிலின் வேகம் 40 கி.மீ. ஆகக் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், கன மழையால் மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.