
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாசிகளின் உள்ளத்தில் இருந்து கனமாகவும் லேசாகவும் வெளிவரும் நகைச்சுவைக் குமுறல் இதுதான்... அம்மா வழியில் ஆட்சி நடத்துறோம்னு... செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்றாதீங்க...அப்பரசன்டிகளா!
2015 டிச.1ம் நாளை சென்னைவாசிகள் எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நவம்பர் மாதம் முதலே இதே போல் கன மழை கொட்டியது. சென்னைக்கு வெளியே உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை நீர் சேர்ந்து ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருந்தது. சென்னைக்கு நீர் வழங்கும் பல ஏரிகள் நவம்பர் மாத இறுதியிலேயே கொள்ளளவை எட்டியிருந்தன.
அப்போது, அணையைத் திறப்பதாகட்டும், ஏரியைத் திறப்பதாகட்டும்... அனைத்தும் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் கட்டுப் பாட்டுக்குள் இருந்து, சமயோஜிதமாக செயல்பட்டு, பேரிடர் நேரா வண்ணம் காக்க வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரையும், தொடர்ந்து எல்லோரும் முதல்வரின் கையசைவுக்கும் காத்திருந்த அவலம்! நான் ஆணையிட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா பெயரில் வெளியாகும் அறிக்கைகள் தான் அவரின் நிர்வாகத் திறனை அப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
டிச.1 அன்றும் அப்படித்தான் ஆனது. ஏற்கெனவே நிரம்பி வழிந்த ஏரிகளுக்கு ஒற்றை நாளில் வானத்தைப் பொத்துக் கொண்டு மேகவெடிப்பாய்க் கொட்டித் தீர்த்த கனமழையின் பெரு நீரை வாங்கிக் கொள்ளவும் தேக்கிக் கொள்ளவும் ஏரிகளிடம் இடம் இல்லாது போயிற்று! அன்று இரவு... திடீரென செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் நீர் சொல்லாமல் கொள்ளாமல், எவ்வித முன்னறிவிப்புமின்றி திறந்துவிடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்துவிடும் என்று செய்தியும் பரவியது. அடையாற்றின் கரையோரத்தில் வசித்த மக்கள் அலறினார்கள். சென்னை நகரை பெருவெள்ளம் சூழந்தது. வீடுகள் மட்டுமல்ல, தொழிற்சாலைகள், கடைகள், வியாபாரத் தலங்கள் என பாழ்பட்டது அனேகம். உயிருக்கும் உடைமைக்கும் சேதம்.
இன்று... ஜெயலலிதா பாணியில் அரசு நடப்பதாக அதிமுக.,வினர் ஒவ்வொரு கணமும் சொல்லிக் கொண்டுதான் உள்ளனர். அந்த ஒப்பீடுகள் எல்லாம் இப்போது ஒரு படி மேலே போய்விட்டது. இன்றைய மழைக் கால பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகிறார்... “அமெரிக்கா லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளை விட தமிழகத்தில் அதுவும் சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு..” என்று!
அமைச்சர் வேலுமணியின் கூற்றை உள்வாங்கி, சென்னை நகரம் பட்ட அலங்கோலத்தை புகைப்படத்துடன் வெளியிட்டு, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் செயல்பாடுகளைக் கண்டு வியந்து ஐநா., விருது வழங்கிப் பாராட்ட உள்ளது என்று கேலியும் கிண்டலும் சமூகத் தளங்களில் பரப்பப் பட்டு வருகின்றன.
இருப்பினும் தற்போது வெளியான செய்தியும் அதே விதத்தில் அமைச்சர் வேலுமணியை கேலி செய்தே பரப்பப்படுகிறது... அது - அமெரிக்கா, லண்டனை விட சிறந்த ஏற்பாட்டின் காரணமாக, பள்ளிக்கரணை - நாராயணபுரம் ஏரி உடைந்து, வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது... என்பதே!