கால்ல விழுந்தான், அதான் கேக் ஊட்டினேன்!: ரெளடிக்கு பர்த்டே கொண்டாடிய இன்ஸ்பெக்டரின் விளக்க வியாக்யானம்!

First Published Feb 20, 2018, 1:46 PM IST
Highlights
And the cupcake fell Thats the cake


தமிழகத்தை கடந்த சில நாட்களாக ‘ரெளடியோஃபோபியா’ போட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையில் தாதா பினுவின் பர்த்டே கொண்டாட்டத்துக்கு, அழையா விருந்தாளிகளாக வந்த போலீஸ் படை சுமார் 77 ரெளடிகளை அள்ளிக் கொண்டு போயி லத்தியாலேயே ட்ரீட் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து நம்மூர் நடிகர் விஷாலில் துவங்கி பக்கத்து ஸ்டேட் கண்டக்டர் பைஜூ வரைக்கும் தமிழக போலீஸை பார்த்து ’பினிட்டீங்க ஆபீஸர்ஸ்!’ என்று சல்யூட் அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த கெத்தை ஒரே நொடியில் கவிழ்த்து காலி பண்ணிவிட்டார் கன்னங்குறிச்சி இன்ஸ் கருணாகரன்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கருணாகரன். இவரது லிமிட்டில் அடங்கும் கொண்டப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரெளடி சுசீந்திரன். அடிதடி, கொலை முயற்சி, மிரட்டல் என சுமார் 24 வழக்குகளுக்கு சொந்தக்காரரான சுசீ, 2006லிருந்து மூன்று முறை குண்டாசில் சிறையிலிருந்தவர் என்பது எக்ஸ்ட்ரா மைலேஜ்.

இப்பேர்ப்பட்ட ரெளடி சுசீந்திரனுக்கும், இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கும் சில பொது நண்பர்களின் வாயிலாக நட்பு முளைத்திருக்கிறது. தனக்கு வரும் சிவில் பஞ்சாயத்துகளை கருணாகரன் வழியே தீர்த்திருக்கிறார் சுசீந்திரன். இதில் இரு தரப்புக்கும் முள்ளங்கி பத்தை போல் செம லாபமாம். ஆக வெற்றிக் கூட்டணி தொடந்திருக்கிறது.

இந்நிலையில்தான் கடந்த 14-ம் தேதியன்று தனது பிறந்த நாளை இனிய நண்பர் இன்ஸ்பெக்டர் கருணாகரனோடு கொண்டாட முடிவெடுத்திருக்கிறார் ரெளடி சுசீந்திரன். கேக் வெட்டப்பட்டதும், அதில் ஒரு துண்டை எடுத்து இன்ஸ்பெக்டர் ரெளடிக்கு ஊட்ட, அது மொபைலில் கிளிக் ஆக, பின் வாட்ஸ் அப்பில் வைரலாக, இதோ காத்திருப்போர் பட்டியலில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார் இன்ஸு.

ஏன் சார் இப்படியெல்லாம் அக்குறும்பு பண்ணுறீங்க? என்று கேட்டதற்கு “அட அந்த சுசீந்திரன் என்கிட்ட தப்பு தண்டா இல்லாத மனுஷனாதான் பழகினார். பல வழக்குகள்ள இருந்து விடுதலையாயிட்டேன்னு சொன்னதாலே போலீஸ் இன்பார்மரா வெச்சிருந்தேன். பாம்பின் கால் பாம்பு அறியுமுன்னு சொல்லுவாங்க. அந்த அடிப்படையில பழைய ரெளடியான அவருக்கு புது ரெளடிகளின் நடமாட்டம் தெரியும் அப்படிங்கிறது என் கணக்கு. இவரை வெச்சே பல கைதுகளை நடத்தி, என் ஸ்டேஷன் லிமிட்டை ஒழுக்கமா வெச்சுக்க நினைச்சேன். அதனாலதான் சுசீந்திரண்ட்ட சுதந்திரமா பழகினேன்.

அன்னைக்கு டூட்டிக்கு கிளம்பிட்டிருந்தேன். அப்போ அந்த சுசீந்திரன் வந்து ‘எனக்கு இன்னைக்கு பிறந்த நாள். இது போக எனக்கு குழந்தை பாக்கியம் வேற கிடைச்சிருக்குது. ஆசீர்வாதம் பண்ணுங்க சார்.’ன்னு சொல்லி கால்ல விழுந்தாப்ல.  பொசுக்குன்னு கால்ல விழுந்துட்டாப்டியேன்னு சொல்லி வேற வழியில்லாம அந்த கேக்கை எடுத்து ஊட்டிவிட்டேன். இதுதான் பெரிய பிரச்னையாகி போச்சு.” என்று அப்பாவியாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதானே! ரெளடிக்கு ஒரு இன்ஸ்பெக்டர் கேக் ஊட்டுனது ஒரு குத்தமாய்யா?

click me!