கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வெளியூர் நபர்களே காரணம்.! மாணவி மர்மச்சாவு மட்டும் காரணம் இல்லை - அன்புமணி

By Ajmal Khan  |  First Published Jul 17, 2022, 1:51 PM IST

 சின்ன சேலம் கலவரத்தின் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 


5 நாட்களாக அமைதியான போராட்டம்

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட வன்முறை நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியிருப்பதும்,  காவல்துறை சரக துணைத் தலைவர் காயமடைந்திருப்பதும் கவலையளிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிக்கலுக்கு  தீர்வு காண்பதற்கு பதிலாக நிலைமையை இந்த அளவுக்கு மோசமாக்கிய காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். சரியாக படிக்க முடியாததால் ஏற்பட்ட கவலையில் அந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், வெளியில் சொல்ல முடியாத வேறு காரணங்களால் மாணவி மர்மமான முறையில் இறந்து விட்டதாக பெற்றோரும் கூறி வந்தனர். மாணவியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலையில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியிருக்கிறது.

Tap to resize

Latest Videos

பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்

போராட்டத்தின் போது காவல்துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியிருக்கின்றனர்; காவல்துறையினர் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்; கல்வீச்சில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் காயமடைந்திருக்கிறார்; 20&க்கும் மேற்பட்ட காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; காவல்துறை மற்றும் பள்ளி வாகனங்கள் தீயிட்டு  எரிக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கலவரக்காரர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். காவல்துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.  நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் என்னென்ன தீய விளைவுகள் ஏற்படுமோ? என்ற அச்சம் எழுகிறது.சின்ன சேலத்தில் நிகழும் அனைத்து கலவரங்களுக்கும் காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். மாணவி மர்மச்சாவு அடைந்த நிலையில், அதற்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; தவறு இல்லை என்று தெரிய வந்திருந்தால் உண்மையை பெற்றோரிடம் விளக்கி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், இதை செய்ய காவல்துறை தவறி விட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. போர்க்களமாக மாறிய சென்னை - சேலம் நெடுஞ்சாலை.. போலீஸ் துப்பாக்கிச்சூடு

போராட்டத்திற்கு மர்ம சாவு காரணமில்லை

சின்ன சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்களோ, மாணவியின் நெருங்கிய உறவினர்களோ இல்லை. வெளியூரிலிருந்து திட்டமிட்டு வந்தவர்கள் தான் கலவரத்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த உண்மையை காவல்துறையும் ஒப்புக் கொண்டிருக்கிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் வெளியூரிலிருந்து வந்து திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய நிலையில், அதை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே அறிந்து காவல்துறை தடுத்திருக்க வேண்டும். ஆனால், காவல்துறை வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படும் வரை கலவரத்தின் தீவிரம் காவல்துறையினருக்கு தெரியவில்லை. காவல்துறை வாகனங்கள் தீயிடப்படும் காட்சிகளையும், பள்ளி வளாகம் சூறையாடப்படும் காட்சிகளையும் ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பிய நிலையில், அவற்றைத் தடுப்பதற்கு அந்தப் பகுதியில் காவலர்களே இல்லை. அந்த அளவுக்கு அங்கு காவலர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. நிலைமையை கணிக்க உளவுத்துறை தவறியது தான் சின்ன சேலம் கலவரத்திற்கு முதன்மையான காரணமாகும். 

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..! மாணவ அமைப்பு போராட்டத்தில் வன்முறை.. போலீசார் துப்பாக்கி சூட்டால் பதற்றம்


சின்ன சேலம் கலவரத்தின் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இந்த விஷயத்தில் காவல்துறையினர் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் இருந்து கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவியின் மர்மச்சாவு குறித்தும் விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார்

 

click me!