வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுங்க.. விவசாயிகள் கதறலை கேளுங்க- அன்புமணி

Published : Oct 10, 2025, 10:22 AM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும்,  கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வசூலிக்கப்படுவதாலும், மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதாலும் நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனர். 

Paddy procurement in Tamil Nadu : காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவில் இந்த முறை நெல் விளைச்சல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நெல்லுக்கான ஈரப்பட வரம்பை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 நடப்பாண்டில் குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கப்பட்டதாலும், நெல்லை நேரடியாக தெளிப்பு முறையில் விதைப்பது உள்ளிட்ட புதிய முறைகளை கடைபிடித்ததாலும் அதிக விளைச்சல் கிடைத்திருக்கிறது. ஏக்கருக்கு சராசரியாக 25 குவிண்டால் நெல் விளைச்சல் கிடைத்திருப்பதால் உழவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால், நெல்லை விற்று பணமாக்குவதற்குள் ஏராளமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களின் மகிழ்ச்சி கலக்கமாக மாறி வருகிறது.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான குவிண்டால் நெல்லை குவித்து வைத்துக் கொண்டு கொள்முதலுக்காக உழவர்கள் காத்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையில் அவை நனைந்து வீணாகிவிட்டன. வயல்களில் புதிதாக அறுவடை செய்யப்படும் நெல்லும் ஈரப்பதம் நிறைந்ததாகவே உள்ளது. நனைந்த நெல்களின் ஈரப்பதம் 25% வரை இருப்பதாக உழவர்கள் கவலையுடன் கூறுகின்றனர். மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். ஆனால், இப்போது மழையில் நனைந்த நெல்களின் ஈரப்பதம் 23 முதல் 25% வரை உள்ளது. இவ்வளவு ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு தன்னிச்சையாக கொள்முதல் செய்ய முடியாது.

மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் தான் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முடியும். எனவே, 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் பேசி அனுமதி வாங்கும்படி உழவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இன்றைய சூழலில் உழவர்களைக் காப்பாற்ற ஒரே வழி மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, 25% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி பெறுவது தான். கடந்த சில ஆண்டுகளாகவே நெல்லின் ஈரப்பத வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்த போதெல்லாம் நிலைமையை உணர்ந்து ஈரப்பதத்தின் அளவை 19% ஆகவும், 20% ஆகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

நெல் மூட்டை கொள்முதல் - விவசாயிகளிடம் லஞ்சம்

நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பெரும் சிக்கல் நெல்லை கொள்முதல் செய்வதற்காக கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படும் கையூட்டு தான்.நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் ரூ.60 வீதம் கையூட்டு வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர். அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டு, ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல் என ரூ.275 வரை கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. அதன்படி பார்த்தால் ஓர் உழவர் ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை விற்க ரூ.6875 கையூட்டாக வழங்க வேண்டும். இவ்வளது அதிக தொகையை கையூட்டாக வழங்கினால் உழவர்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காது.

வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும்

மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களிலும், பிற அமைப்புகளிலும் , கொள்முதல் நிலையங்களில் நடத்தப்படும் பகல்கொள்ளைக்கு முடிவு கட்டுமாறு உழவர்கள் கதறுகின்றனர். மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழவர்களை சிரமப்படுத்தக்கூடாது என்று ஆணையிடுகிறார். 

உணவுத்துறை அமைச்சரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தலைவரும் காவிரி பாசன மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இந்த கையூட்டு கலாச்சாரம் மட்டும் இன்னும் ஒழியவில்லை. எனவே, தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!