தமிழக ரேசன் கடைகளில் 2 மாதங்களாக வழங்கப்படாத பருப்பு, பாமாயில் - அரசுக்கு அன்புமணி ஆலோசனை

By Velmurugan s  |  First Published Jun 3, 2024, 12:35 PM IST

நியாயவிலைக் கடைகளில்  இரு மாதங்களாக வழங்கப்படாத  பருப்பு, பாமாயிலை, இரு மாதங்களுக்கும் சேர்த்து வழங்க  அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த இரு மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. பொதுமக்களுக்கு வழங்குவதற்கான  துவரம்பருப்பு, பாமாயில்   கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும்,  அவை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை  நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில்  வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில்  சிறப்பு பொது வழங்கல் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ துவரம் பருப்பு  ரூ.30 என்ற விலையிலும்,  ஒரு கிலோ  பாமாயில்  ரூ.25 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி  உயர்விலிருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்ள  இது பெரிதும் உதவியாக உள்ளது.  ஆனால்,  கடந்த ஏப்ரல் மாத மத்தியிலிருந்து  நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென மயங்கி விழுந்த கிராம உதவியாளருக்கு நிகழ்ந்த சோகம்; அரியலூரில் பரபரப்பு

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கான  ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும்,  ஒப்பந்ததாரர்களிடமிருந்து  துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை பெறப்பட்டு நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கடந்த மே 27-ஆம் தேதி விளக்கமளித்த  தமிழக அரசின் பொதுவழங்கல் துறை,  மே மாதத்திற்கான  துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் அவற்றை ஜூன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று  அறிவித்தது.

ஆனால், ஜூன் மாதம் முதல் வாரம் அடுத்த சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் பெரும்பான்மையான  நியாயவிலைக் கடைகளில்  மே மாதத்திற்கான துவரம்பரும்பு  இன்னும் வழங்கப்படவில்லை. சில கடைகளில்  துவரம் பருப்பு வழங்கப்பட்ட நிலையில், பாமாயில் வழங்கப்படவில்லை; பாமாயில் வழங்கப்பட்ட கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை.

தாமரை தமிழ்நாட்டில் மலர இடமே இல்லை: திருமாவளவன் திட்டவட்டம்!

சிறப்பு பொதுவழங்கல் திட்டத்தின்படி பொருட்கள் வழங்கப்பட வேண்டிய 2.33 கோடி குடும்ப அட்டைதாரர்களில் ஒரு கோடியே 17 லட்சத்து  89,212 பேருக்கு துவரம் பருப்பும், ஒரு கோடியே  9 லட்சத்து  45,217 பேருக்கு பாமாயிலும் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசின்  தரப்பில் கூறப்பட்டாலும், இந்த எண்ணிக்கை காகிதத்தில் மட்டும் தான் உள்ளதே தவிர, களத்தில் இவ்வளவு பேருக்கு  துவரம் பருப்பும்,  பாமாயிலும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.

வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம்பருப்பு   ரூ.180 வரையிலும்,  பாமாயில் ஒரு கிலோ ரூ.125 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.  நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படாததால், அவற்றை 5 முதல் 6 மடங்கு வரை அதிக தொகை கொடுத்து  வெளிச்சந்தையில்  வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, வெளிச்சந்தையில் தேவை அதிகரித்திருப்பதால் விலையும்  தொடர்ந்து  அதிகரித்து  வருகிறது.

ஏழை மக்களின் தேவையையும்,  பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம்  பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாதத்தில்  துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை கிடைக்காத குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் ஜூன் மாதத்தில்  அவற்றை சேர்த்து வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

click me!