புதிய ஆற்று மணல் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

Published : May 26, 2025, 06:29 PM IST
anbumani ramadoss

சுருக்கம்

தமிழ்நாட்டில் புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கும் வகையில் புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவர் சையத் முசாமில் அப்பாஸுக்கு அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வணக்கம்!

பொருள்: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், புதிய ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது; ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளையும் மூட ஆணையிடக் கோருதல் - தொடர்பாக

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை மிக மோசமாக பாதிக்கக் கூடிய சிக்கல் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த ஆற்று மணல் குவாரிகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது மூடப்பட்டன. அதன்பின் 2023-ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்கள் வரை தமிழகத்தில் எந்த மணல் குவாரியும் செயல்படவில்லை. 2023-ஆம் ஆண்டு மே மாதம் தான் தமிழகம் முழுவதும், தங்கள் அமைப்பின் ஒப்புதல் பெற்றதாகக் கூறி 25 மணல் குவாரிகள் தொடங்கப் பட்டன. மேலும் சில மணல் குவாரிகள் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தன.

அந்தச் சூழலில், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், அவ்வாறு எடுக்கப்படும் மணலை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட மணல் குவாரிகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியிலும், 2024ஆம் ஆண்டு தொடக்கத்திலும் அமலாத்துறையினர் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மணல் குவாரிகள் அனைத்தும் தமிழக அரசால் மூடப்பட்டன.

கடந்த காலங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளுக்கு பதிலாக 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், கடலூர் மாவட்டம் கிளியனூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க தங்களின் அமைப்பு தடையின்மைச் சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள குவாரிகளுக்கும் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் தேவை குறித்து தாங்கள் நன்கு அறிவீர்கள். தமிழக அரசால் தொடங்கப்படும் மணல் குவாரிகள் அனைத்திலும் விதிகளுக்கு மாறாகவும், அளவுக்கு அதிகமாகவும் மணல் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள 2024-25ஆம் ஆண்டுக்கான திட்டச் சாதனைகள் என்ற ஆவணத்தில், தமிழகத்தில் 23 மணல் குவாரிகள் செயப்பட்டு வருவதாகவும், அவற்றிலிருந்து ஒரு யூனிட் மணல் ரூ.1,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டதன் மூலம், 2023-24ஆம் ஆண்டில் ரூ.22.21 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டு முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 100 யூனிட் மணல் அள்ளப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி பார்த்தால், ஒவ்வொரு மணல் குவாரியிலும் ஆண்டுக்கு 9656 யூனிட்டுகள் மட்டுமே மணல் அள்ளப்படுவதாகத் தான் பொருள். ஆண்டுக்கு 9656 யூனிட்டுகள் என்றால், ஒரு நாளைக்கு 26 யூனிட்டுகள், அதாவது 10 சரக்குந்துகளுக்கு மட்டும் தான் மணல் எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறுகிறது. ஒவ்வொரு மணல் குவாரியிலும், எந்த நேரமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்குந்துகள் காத்திருக்கும் நிலையில், வெறும் 10 சரக்குந்து அளவுக்கு மட்டுமே மணல் எடுக்கப்படுவதாக அரசு கூறுவது அப்பட்டமான பொய் என்பதை தங்களின் முதல் பார்வையிலேயே புரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி, தங்களின் தலைமையிலான மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டில் 28 இடங்களில் 190 ஹெக்டேர் பரப்பளவில் மட்டும் தான் ஆற்று மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை விட 5 மடங்கு அதிகமாக 987 ஹெக்டேர் பரப்பளவில்; ஆற்று மணல் எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை ஆய்வில் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து இரு ஆண்டுகளில் 4.05 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் எடுத்ததாக தமிழக அரசு குறிப்பிட்டிருக்கும் நிலையில், அதை விட 7 மடங்குகள் அதிகமாக 27.70 லட்சம் யூனிட்டுகள் மணல் எடுக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை அமைப்பதற்காக தங்களின் தலைமையிலான ஆணையத்திடம் அனுமதி பெற்ற நீர்வளத்துறை, நீங்கள் விதித்த நிபந்தனைகளை மதித்து நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களைத் திரட்டி தங்களின் பார்வைக்காக முன் வைத்திருக்கிறேன்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் 25 இடங்களில் புதிய மணல் குவாரிகளை தமிழக அரசு திறந்தது. அவற்றிலிருந்து 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுப்பதற்கு மட்டுமே தங்களின் தலைமையிலான மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இந்த அளவு மணலை வெட்டி எடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே மணல் குவாரிகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த மணல் குவாரிகளில் இருந்து 27.70 லட்சம் அலகுகள் மணல் அள்ளப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 4 மடங்கு என்பதும், பத்தாண்டுகளுக்கும் மேலாக வெட்டி எடுக்கப்பட வேண்டிய ஆற்று மணல் சில மாதங்களிலேயே கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை தங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்னொருபுறம் ஆறுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லையில்லாமல் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் நடைபெறும் மணல் கொள்ளையால் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குள் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீரை உப்புநீராக மாற்றியுள்ளது. இந்த இயற்கைச் சீரழிவைத் தடுப்பதற்கான தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, மணல் குவாரிகளைத் திறப்பதில் மட்டும் தீவிரம் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் கட்டுமானத் தேவைக்கு ஆற்று மணலை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. செயற்கை மணல் உற்பத்தியை அதிகரிப்பது, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வது போன்றவற்றின் மூலம் மணல் தேவையை சமாளிக்க முடியும்.

அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் மேலும், மேலும் மணல் குவாரிகளைத் திறப்பது சுற்றுச் சூழல் வேகமாக சீரழிவதற்கு வகை செய்து விடும். இதை தங்கள் தலைமையிலான மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதிக்கக் கூடாது. அதற்காக, கீழ்க்கண்ட 3 நடவடிக்கைகளை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

1. தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் அமைக்க தங்கள் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது.

2. அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளையும் திரும்பப் பெற்று அந்த குவாரிகளை மூடுவதற்கு ஆணையிட வேண்டும்.

3. தமிழ்நாட்டில் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட்டு வந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் அப்பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அன்புமணி எழுதியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Tamil News Live today 06 December 2025: அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி