இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது அமைக்கப்பட வேண்டும் என்பது மத்தியஅரசின் நிலைப்பாடு ஆகும். ஆனால், உங்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிராக அமைந்திருக்கிறது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பாவம், புதிய மருத்துவ கல்லூரி திறக்க தடை விதிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்திருப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ,
மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான இளநிலை மருத்துவக் கல்வி புதிய விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 16.08.2023-ஆம் நாள் மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் தமிழ்நாடு, கேரளம் போன்ற வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களையே பாதிக்கும்.
புதிய கல்லூரிகள் திறக்க தடை
2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை ஏறக்குறைய 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள்தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது; அதுமட்டுமின்றி, இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது. புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலுங்கானம் ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்கானது; இதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குதல், மருத்துவர்களை உருவாக்குதல், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றை மக்கள்தொகையுடன் ஒப்பிடுவதே தவறு ஆகும். மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் தேவைகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே தவிர, மக்கள்தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது. இதை மருத்துவ ஆணையம் உணர வேண்டும். இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தங்கள் தலைமையிலான அரசின் நிலைப்பாடு ஆகும். ஆனால், உங்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிராக அமைந்திருக்கிறது தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள்.
இந்திய மாணவர்கள் பயன்
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், அவை அனைத்திலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே படிப்பதில்லை. இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அதனால், மருத்துவக் கல்லூரிகள் போதிய அளவில் இல்லாத வட இந்திய மாணவர்கள் தான் பயனடைகின்றனர். இந்தியாவில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பு போதிய அளவில் ஏற்படுத்தப்படாத மாநிலங்களில் மருத்துவர்களை உருவாக்குவதற்கும் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுகின்றன.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் நகர்ப்புறங்களில் தான் ஓரளவு மருத்துவர்கள் உள்ளனர். மொத்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில் தான் உள்ளனர். கிராமப்பகுதிகளில் 30%க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். இந்த நிலையை மாற்றி, கிராமப்புறங்களில் மருத்துவர் எண்ணிக்கையை உயர்த்த திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய தேசிய மருத்துவ ஆணையம், அதற்கு முற்றிலும் எதிராக புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தடைவிதிக்கும் தவறான முடிவை எடுத்துள்ளது.
உத்தரவை திரும்ப பெறுங்கள்
எனவே, 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் என்ற விகிதத்திற்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடையாது; கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் கூடாது என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆணையிட வேண்டும். அதன்மூலம் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவை வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்வதாக அன்புமணி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்