கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் ஸ்டாலின்.! இறங்கி அடிக்கும் அன்புமணி

Published : Sep 02, 2025, 11:44 AM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3201 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பாமக தலைவர் அன்புமணி இதனை மோசடிப் பயணம் எனக் கூறி, சென்னையிலேயே இவற்றைச் செய்திருக்கலாம் எனவும் விமர்சித்துள்ளார்.

Anbumani criticizes Chief Minister Stalin's German trip : ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அங்கு 3 நிறுவனங்களுடன் ரூ.3201 கோடி முதலீடு திரட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டிருக்கிறது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கும் எந்த நிறுவனமும் புதிய நிறுவனம் அல்ல... அவை அனைத்தும் ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வருபவை தான். முதலமைச்சரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம் என்பது அவரது பயணத்தின் முதல் நாளிலேயே உறுதியாகிவிட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனி பயணம்

ரூ.2000 கோடி முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் Knorr-Bremse என்ற நிறுவனத்தின் செயற்கை அறிவுத் திறன் மையம் சென்னை கிண்டிக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. ரூ.1000 கோடி முதலீடு செய்யவிருக்கும் Nordex குழுமத்தின் காற்றாலை தயாரிப்பு நிறுவனம் சென்னைக்கு அருகில் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. மூன்றாவதாக ரூ.201 கோடி முதலீடு செய்யவுள்ள ebm-papst நிறுவனத்தின் உலக திறன் மையம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடைசி இரு முதலீடுகளும் ஏற்கனவே செயல்பட்டு வரும் அமைப்புகளின் விரிவாக்கத்திற்காக செய்யப்படுபவை ஆகும்.

முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள ரூ.3201 கோடி முதலீடுகளும் இயல்பாக வந்திருக்கக் கூடியவை தான். தமிழக அரசு நினைத்திருந்தால் அதிகாரிகள் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்க முடியும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை பரிவாரங்களுடன் ஜெர்மனி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, கொக்கை நேரடியாக பிடிப்பதற்கு பதிலாக அதன் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மறைத்தவுடன் அதை பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.

வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவை என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் வீணாணவை; மக்களின் வரிப்பணத்தை அழிக்கக் கூடியவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஜெர்மனி பயணத்தையும் சேர்த்து இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி தான். இது ஒட்டுமொத்தமாக கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் ரூ.10.65 லட்சத்துடன் ஒப்பிடும் போது, வெறும் 2% மட்டும் தான்.

தமிழ்நாட்டுக்கான மொத்த முதலீட்டு ஒப்பந்தங்களில் 98 விழுக்காட்டை சென்னையில் இருந்தபடியே செலவில்லாமல் சாத்தியமாக்க முடியும் எனும் போது, வெறும் 2% முதலீட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது உடலை வருத்திக்கொண்டு வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்