அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர்.. கொந்தளிக்கும் அன்புமணி

Published : Dec 02, 2025, 12:05 PM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

கடலூர் மாவட்டத்தில் வீட்டு வாசலில் ஓடும் வெள்ள நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தயின் குடும்பத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் வீட்டு வாசலில் ஓடும் வெள்ள நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த பழனி என்பவரின் ஒன்றரை வயது குழந்தை அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தையை இழந்து வாடும் பழனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மேல்பாதி கிராமத்தில் உள்ள பொத்தேரியில் நீர் நிரம்பி, வெள்ளநீர் வடிகால் வாய்க்கால் வழியாக பாளையங்கோட்டை பெரிய ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த வெள்ள வடிகால் வாய்க்காலின் ஓரத்தில் உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தான் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளது.

பொத்தேரியில் இருந்து வெள்ள நீர் ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்த ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும் மதகு சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால், அதிகப்படியான நீர் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாய்க்காலில் ஓடியதால் தான் அதில் தவறி விழுந்த குழந்தை வேகமாக அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்து விட்டது. சேதமடைந்த மதகை சரி செய்ய வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் முதல் அமைச்சர் வரை அனைவரிடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், ஐந்தாண்டுகளாகியும் மதகு சரி செய்யப்படாததால் அப்பாவி குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பொத்தேரியின் சேதமடைந்த மதகை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு
தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ.1000 கிடையாது.. மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழக அரசு அதிர்ச்சி தகவல்