
பாரம்பரியமிக்க திருப்பரங்குன்றம் மலை கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய மலையாக மாறி உள்ளது. இதனிடையே ராமரவிக்குமார் என்ற நபர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. இதனால் இந்த தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
மனுவை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், “பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆகையால் ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி திருப்பரங்குன்றம் மலையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக வெளியான தீர்ப்பில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றலாம் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்பை பாஜக, இந்துதுவா அமைப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு. இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.